Sunday 1 January 2012

வாழ்க்கை என்றால் என்ன ?


     முல்லா நஸ்ருதீன் வசிக்கும் நகரத்திற்கு சக்கரவர்த்தி வருகிறார் என்று முன்கூட்டியே தகவல் வந்தது. நகர மக்களுக்கு சக்கரவர்த்தியிடம் பேசுவதில் பயம் கலந்த தயக்கம்அவர்களோ படிப்பறிவில்லாதவர்கள். அவர்கள் எல்லோரும் முல்லாவிடம் வந்துநாங்களோ படிப்பறிவில்லாத தற்குறிகள். சக்கரவர்த்தியோ நம் நகரத்திற்கு முதல் முறையாக வருகிறார். எங்களுக்கு ஒரு சக்கரவர்த்தியிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அறிவெல்லாம் கிடையாது. அதனால் எங்கள் சார்பாக நீங்களே சக்கரவர்த்தியிடம் பேச வேண்டும்என்று வேண்டிக் கொள்ள முல்லாவும் ஒத்துக்கொண்டார். ”கவலைப்படாதீர்கள். நான் பல அரசர்களைப் பார்த்திருக்கிறேன்.
அவர்களிடம் பேசியும் இருக்கிறேன். அரசவைக்கும் நான் போயிருக்கிறேன். அதனால் இது
எனக்குப் பெரிய விஷயமில்லைஎன்றார்.
      ஆனால் சக்கரவர்த்தியின் ஆட்களுக்கோ படிப்பறிவில்லாத அந்த நகர மக்கள் ஏடாகூடமாக ஏதாவது சக்கரவர்த்தியிடம் பேசி விடுவார்களோ என்று பயம். எனவே சக்கரவர்த்தி வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அந்த நகரத்திற்கு வந்து மக்கள் சார்பாக யார் பேசப் போகிறார் என்று கேட்டார்கள். மக்கள் முல்லாவை சுட்டிக் காட்டினார்கள். ”அவர் தான் எங்கள் வழிகாட்டி. இறை சேவகர். தத்துவஞானி எல்லாமே.அவர் எங்கள் சார்பாக சக்கரவர்த்தியிடம் பேசுவார்என்றனர்.சக்கரவர்த்தியின் ஆட்கள் அவர்களுடைய அடைமொழிகளால் திருப்தி அடைந்து விடவில்லை.முல்லாவைத் தயார் செய்வது தங்கள் பொறுப்பு என்று கருதினார்கள்
அவர்கள்முல்லாவிடம்நீங்கள் கவலைப்படாதீர்கள். சக்கரவர்த்தி கஷ்டமான கேள்விகள்
எதுவும் கேட்க மாட்டார். எளிமையான கேள்விகள் தான் கேட்பார். நீங்கள் அதற்கு
பதில் அளித்தால் போதும். முதலில் உங்கள் வயது எத்தனை என்று கேட்பார்.
உங்களுக்கு வயது எத்தனை?”

முல்லா சொன்னார். “எழுபது

அப்படியானால் முதல் கேள்விக்குஎழுபதுஎன்று சொல்லுங்கள் போதும். நீங்கள்
அதற்கு அதிகமாக எதுவும் சொல்லக் கூடாது. அடுத்த கேள்விநீங்கள் இறை சேவகராக
எத்தனை வருடங்களாக இருக்கிறீர்கள் என்று கேட்பார். நீங்கள் எத்தனை வருடங்களாக
இறை சேவகராக இருக்கிறீர்கள்?”

நாற்பது வருடங்கள்

சரி. நீங்கள் இரண்டாவது கேள்விக்குநாற்பது வருடங்கள் என்று சொல்லுங்கள்
போதும். தாறுமாறாக ஏதேதோ சொல்லி சக்கரவர்த்தியின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம்
என்று சொல்லி வேறு சில கேள்விகளையும், அதற்கான பதில்களையும் சொல்லித்
தந்தார்கள்.

இப்படி எல்லாம் சொல்லி முல்லா நஸ்ருதீனைத் தயார் செய்த ஆட்கள்
சக்கரவர்த்தியிடமும் சென்றுஅந்த நகர மக்கள் படிப்பறிவில்லாத முட்டாள்கள்.
அவர்கள் பேசத் தேர்ந்தெடுத்த ஆளும் அவர்களைப் போலவே முட்டாள் போலவே தெரிகிறான்.
எனவே நீங்கள் கஷ்டமான கேள்விகள் கேட்டு அந்த ஆளை தர்மசங்கடத்திற்கு
உள்ளாக்காதீர்கள். நீங்கள் இந்த எளிமையான கேள்விகளையே கேளுங்கள்.” என்று சொல்லி
முல்லாவிற்குச் சொல்லித் தந்த கேள்விகளை எழுதி சக்கரவர்த்தியிடமும் தந்தார்கள்.
சக்கரவர்த்தியும் படித்துப் பார்த்து ஒத்துக் கொண்டார்.

சக்கரவர்த்தி நகரத்திற்கு வந்த போது முல்லா மரியாதையுடன் முன்னால் வந்து
நின்றார். சக்கரவர்த்திக்கு கேள்விகள் நினைவிருந்தாலும் கேள்விகளின் வரிசை
மறந்து போய் விட்டது. அவர் முல்லாவிடம்நீங்கள் எவ்வளவு வருடங்களாக இறை
சேவகராக இருக்கிறீர்கள்என்று கேட்டார்.

சக்கரவர்த்தியின் ஆட்கள் அருகிலேயே இருப்பதைப் பார்த்தபடியேஎழுபதுஎன்றார்
முல்லா.

சக்கரவர்த்திக்கோ ஆச்சரியம். இந்த ஆளுக்கு வயதே எழுபது இருக்கும் போல
இருக்கிறது. ஆனால் எழுபது வருடங்களாக இறை சேவகராக இருக்கிறேன் என்கிறாரே என்று
நினைத்தவராகஅப்படியானால் உங்களுக்கு வயது எவ்வளவு?” என்று கேட்டார்.

முல்லா சொன்னார். “நாற்பது வருடங்கள்

சக்கரவர்த்தி கேட்டார். “உங்களுக்கென்ன பைத்தியமா?”

முல்லா சொன்னார். “ஐயா நாம் இருவருமே பைத்தியங்கள் தான். நீங்கள் தவறான
கேள்விகளைக் கேட்கிறீர்கள். நானோ சரியான பதில்களைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறேன். உங்கள் ஆட்கள் நான் சரியாகச் சொல்கிறேனா என்று என்னைப்
பார்த்தபடியே இருக்கிறார்கள். நான் என்ன செய்வேன்?”

படிக்கையில் இது நகைச்சுவையாகத் தோன்றினாலும் நம் வாழ்விலும் இது போன்ற
முட்டாள்தனங்களை நாமும் நிறைய செய்கிறோம்.


வாழ்க்கை என்ற பரிட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் முன் கூட்டியே
பதில்களைத் தயார் செய்து கொண்டு காத்திருக்கையில் பல சமயங்களில் கேள்வித்தாளே
மாறிப் போகிறது. கேள்விகள் மாறி விட்டனவே என்று கோபப்படுகிறோம். எத்தனை
கஷ்டப்பட்டு கேள்விகளுக்கு பதில்களைத் தயார் செய்து வைத்திருந்தோம் என்று எண்ணி
குமுறுகிறோம். தயார் செய்து வைத்திருந்த கேள்விகள் கேட்கப்படாமல் வேறு
கேள்விகள் கேட்கப்பட்டு விட்டனவே என்று அங்கலாய்க்கிறோம்.

சிலபஸில் (syllabus) இல்லாத கேள்வி கேட்கப்படும் போது மாணவன் திடுக்கிடுவது போல
தான் நாம் இருக்கிறோம். சில பிரச்னைகள் வரும் போது இது போன்ற பிரச்னைகள் எனக்கு
வந்திருக்கக் கூடாதே என்று மலைத்துப் போய் விடுகிறோம்.

வாழ்க்கையில் முன்பே தயார் செய்து வைத்திருக்கும் தீர்வுகள் என்றும் புதிதாக
வரும் பிரச்னைகளுக்குப் பொருத்தமாக இருப்பதில்லை. சூழ்நிலைகளும், பிரச்னைகளின்
தன்மைகளும் அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பதால் நாம் வாழ்வில் எதிர்கொள்கிற
கேள்விகளும் மாறிய வண்ணம் தான் இருக்கின்றன. தினசரி வாழ்க்கையில் ஒவ்வொரு
சூழ்நிலையையும், நிகழ்வையும் முழுமையாகப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல
நடந்து கொள்வது தான் சரியாக இருக்க முடியும்.

அது போல அடுத்தவர்களுக்கு பயன்பட்ட தீர்வுகளும், நம் பிரச்னைகளுக்கு சரியான
தீர்வுகளாக இருக்கும் என்று சொல்லி விட முடியாது. அதுவும் தயார் செய்து
வைத்திருக்கும் பதில்களைப் போலத் தான். நாம் தயார் செய்ததற்குப் பதிலாக
அடுத்தவர் தயார் செய்தது.

எனவே வாழ்க்கை என்ற பரிட்சையில் பெரும் வெற்றி பெற நிகழ்காலத்தில் முழுவதுமாக
இருங்கள். என்ன கேள்வி கேட்கப்படுகிறது என்று தெரியாமலேயே பதிலைத் தயார் செய்து
எழுதத் துடிக்காதீர்கள். அடுத்தவர் பதிலைகாப்பிஅடிக்காதீர்கள். அவர்கள்
எழுதுகின்ற பரிட்சையே வேறாகக் கூட இருக்கலாம். கேள்வியைப் புரிந்து கொண்டு,
உங்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு, சிந்தித்து
தகுந்த பதில் எழுத ஆயத்தமாக இருங்கள். அப்போது மட்டுமே உங்களால் வாழ்க்கையில்
உண்மையான வெற்றி பெற முடியும்.